தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்
நீண்ட கால மற்றும் குறுகிய கால முறையில் மட்கு தயாரித்தல்

நீண்ட கால முறையில் மட்கு தயாரித்தல்
நீண்ட காலமுறையில் மட்கு தயாரிக்க 26 நாட்களாகும். மட்கு தயாரிக்க 2 நாட்களுக்கு முன், வைக்கோல் துண்டுகளை 3மீ அகலம் மற்றும் 1 மீட்டர் உயரத்திற்கு அடுக்குகளாகப் பரப்பித் தண்ணீர் விட்டு நனைக்க வேண்டும். சுமார் 24 மணி நேரத்திற்கு முன்னதாக, கோதுமைத் தவிடு மற்றும் நெல் தவிட்டுடன் இரசாயன உரங்களைக் கலந்து, தனிக் குவியலாக வைக்க வேண்டும்.

மட்கு தயாரிக்கும் நாளில், வைக்கோல் துண்டுகளில் ஈரப்பதம் 75-77 சதமாக இருக்க வேண்டும். அவற்றுள் குவியலாக்கப்பட்டுள்ள கோதுமைத் தவிடு மற்றும் நெல் தவிட்டுடன் இரசாயன உரக்கலவையை நன்கு கலந்து, 1.5 மீட்டர் அகலம் 1.5மீட்டர் உயரம் கொண்ட டிரபீசிய வடிவக் குவியல்களாக மட்கு தயாரிக்கும் களத்தில் அமைத்துக் கடின மரப் பலகைகளால் பக்கவாட்டில் அழுத்தி வைக்க வேண்டும். தயாரிக்க வேண்டிய மட்கின் அளவைப் பொறுத்துக் குவியலின் நீளத்தை மாற்றிக்கொள்ளலாம்.

பொதுவாக மூலப்பொருட்கள் மட்குவதற்குத் தேவையான 65° செ. வெப்பநிலை, மட்குக் குவியலின் உட்புறத்தில் மட்டுமே உண்டாகும். குவியலின் மேற்புறமும் நான்கு பக்கங்களிலும் காற்றுப்படுவதால் வெப்பநிலை குறைந்து, அவை சரியாக மட்காமல் இருக்கும். எனவே குவியலை அடிக்கடி திருப்பி மாற்றியமைக்க வேண்டும்.

.முதல் திருப்புதல்
ஆறாவது நாள் குவியலைக் கலைத்துக் காற்றோட்டம் ஏற்படுத்தி, தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துப் பின் மீண்டும் குவிக்க வேண்டும். முதலில் குவியலின் வெளிப்புறத்தையும் மேற்புறத்தையும் தனியாகப் பிரித்துத் தண்ணீர் தெளிக்க வேண்டும். மட்குக் குவியலின் உட்புறத்தில் தனியாகப் பிரித்து அதன் வெப்பநிலையைக் குறைக்க வேண்டும். பிறகு, 12-14 மணி நேரத்திற்கு முன்பாகவே கலந்து வைக்கப்பட்ட   3 கிலோ கால்சியம் அம்மோனியம் நைட்ரேட், 1.2 கிலோ யூரியா மற்றும் 15 கிலோ கோதுமைத் தவிடு ஆகியவற்றை இந்த மட்குக் குவியலுடன் சேர்க்க வேண்டும். குவியலை நன்றாகக் கலந்து, மட்கு தயாரிக்க ஆரம்பித்த முதல் நாளில் செய்தது போலவே மீண்டும் குவிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது, கலைப்பதற்கு முன் இருந்த குவியலின் மேல்பகுதி அடியிலும் நடுப்பகுதி இடையிலும்,  அடிப்பகுதி மேலும் அமையுமாறு செய்ய வேண்டும்.

. இரண்டாவது திருப்புதல்
பத்தாவது நாளில் இரண்டாவது  முறையாகக் குவியலைக் கலைத்து காற்றோட்டம் ஏற்படுத்தி,  முன்பு கூறியது போலவே டிரபீசிய வடிவத்தில் மீண்டும் குவிக்க வேண்டும். முதலில் குவியலின் நான்கு பக்கங்களிலும் மேற்புறத்திலும் உள்ள பகுதிகளைத் தனியாகப் பிரிக்க வேண்டும். பிறகு மற்ற பகுதிகளையும் கலைத்து வெப்பம் குறைய விட வேண்டும். மட்குடன் 10 கிலோ கால்சியம் கார்பனேட் 5 கிலோ சர்க்கரை ஆலைக்கழிவு மற்றும் 150 கிராம் கார்போபியூரான் குருணை மருந்து ஆகியவற்றை  நன்றாகக் கலக்க வேண்டும். ஓரளவு மட்கிய இப்பொருட்களை மீண்டும் குவிக்கும் போது, ஆறாம் நாளில் கலைப்பதற்கு முன் இருந்த குவியலின் நடுப்பகுதி அடியிலும், மேல்பகுதி இடையிலும், அடிப்பகுதி மேலும் அமையுமாறு செய்ய வேண்டும்.

.மூன்றாவது திருப்புதல்
பதின்மூன்றாவது நாளில் ஏற்கனவே கூறியது போலவே மட்குக் குவியலைக் கலைத்துக் காற்றோட்டம் ஏற்படுத்தி, 30 கிலோ ஜிப்சத்தை மட்குடன் கலந்து மீண்டும் குவிக்க வேண்டும். இம்முறை, முன்பு இருந்த குவியலின் மேல்பகுதி அடியிலும், அடிப்பகுதி இடையிலும், நடுப்பகுதி மேலும் அமையுமாறு செய்ய வேண்டும்.

இது போலவே நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழாவது முறையாக 16, 19, 22 மற்றும் 25 ஆம் நாட்களில் மட்டும் குவியலைக் கலைத்துக் கட்டிகளாக மட்கி இருப்பனவற்றை உடைத்து மீண்டும் குவியலைக் தேவையான அளவு தண்ணீர் தெளித்துப் பராமரிக்க வேண்டும். இருபத்தி எட்டாவது நாளில் குவியலைக் கலைத்து மட்குடன்  5 சதவிகித அளவுக்கு லின்டேன் பூச்சிக் கொல்லித் துகளைக் கலந்து, காளான் வித்திடப் பயன்படுத்தலாம்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட மட்கு கரும்பழுப்பு நிறத்துடனும், இனிப்பான மணத்துடனும், பிசுபிசுப்பற்றதாகவும், 65 முதல் 70 சத ஈரப்பத்துடனும், வெள்ளை நிற “பயர் பேன்ங்ஸ்” எனப்படும் ஆக்டினோமைசிட் திட்டுகள் நிறைந்ததாக இருத்தல் அவசியம். ஒரு வேளை மட்குக் குவியலைக் கலைக்கும் போது அமோனியா நெடி இருப்பின் மீண்டும் குவித்து வைத்து, அமோனியா நெடி முழுமையாக நீங்கியபின் பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக, மட்கில் சேர்க்கப்படும் நீரின் அளவு காளான் உற்பத்தியுடன் நேர்விகிதத்தில் இருக்கும். அதிகமாக நீர் சேர்த்தால் மட்கில் உள்ள சத்துகள் நீக்கப்பட்டுக் காளான் உற்பத்தி குறையும். நீரின் அளவு குறைவாக இருந்தால் மட்கு உலர்ந்து காணப்படும். தவிர, வைக்கோல் சரியாக  மட்காது. இதனால் காளான் வித்துப் பரவும் நிலையில் பிரச்சினைகள் ஏற்படும். எனவே மட்குக் குவியலிலிருந்து சத்துப் பொருட்கள் நீர் மூலம் வழிந்தோடுவதைத் தடுக்க, களத்தின் ஓரத்தில் ஒரு சிறிய குழி அமைத்து வழிந்தோடும் நீரைச் சேகரித்துத் திரும்பவும் மட்கின் மீது தெளிக்க வேண்டும். மட்கில் நீரின் அளவு சரியாக உள்ளதா என்று அறிவதற்கு மட்கை ஆங்காங்கே எடுத்து உள்ளங்கையில் வைத்து நன்றாக அழுத்திப் பார்க்க வேண்டும். இந்நிலையில் விரல்களுக்கிடையில் நீர் சொட்டக்கூடாது. அதே சமயம் லேசான ஈரப்பதம் இருக்க வேண்டும்.

குறுகிய கால முறையில் மட்கு தயாரித்தல்
குறுகிய காலமுறையில் மட்கு தயாரிப்பதில் இருநிலைகள் உள்ளன. இவற்றை முறையே வெளித்தள மற்றும் உள்தள நிலைகள் என்று கூறலாம். வெளித்தள நிலையில், மட்கு தயாரிக்கத் தேவையான வைக்கோல் துண்டுகள், தவிடு போன்றவற்றைக் கலந்து, களத்தில் 3 மீ அகலம் 1 மீ உயரத்திற்குப் பரப்பித் தண்ணீர் ஊற்றி நனைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் குவியலைக் கலைத்துத் தண்ணீர் ஊற்ற வேண்டும். குவியலிலிருந்து வழிந்தோடும் நீரை சிமெண்ட் களத்தின் ஓரங்களில் குழிகள் அமைத்துச் சேகரித்து மீண்டும் வைக்கோல் குவியலின் மேல் ஊற்றி சத்துப் பொருட்கள் வீணாகாதவாறு செய்ய வேண்டும். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து வைக்கோலுடன், இரசாயன உரங்களைக் கலந்து ஈரப்பதம் 75-77 சதம் இருக்கும் நிலையில் 1.5 மீ அகலம் 1.5 மீ உயரமுள்ள டிரபீசியக் குவியல்களாக அமைத்து நொதித்தலுக்கு உட்படுத்த வேண்டும். அடுத்ததாக 4, 7 மற்றும் 10 வது  நாட்களில் குவியலைக் கலைத்து ஜிப்சம் இட்டு, காற்றோட்டம் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு நொதித்த மூலப் பொருட்களை, உள்தள நிலையில் அதற்காக அமைக்கப்பட்ட தனி அறைகளில் மரப்பெட்டிகளில் அல்லது நேரடியாக நிரப்பித்தொற்று நீக்க வேண்டும். நீராவியையும் காற்றையும் கலந்து அறையினுள் செலுத்தி அறையின் வெப்பநிலை 45 முதல் 48° செ. இருக்குமாறு செய்ய வேண்டும். இந்நிலையில் மூலப்பொருட்களின் வெப்பநிலை 50 – 55°செ. ஆக இருக்கும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்கள் வைத்திருந்தால், நொதித்தல் முழுமையடையும். இந்நிலையில் காற்றுப் போக்கிகளை முற்றிலுமாக அடைத்து, அறை வெப்பநிலையை 58°செ. உயர்த்த வேண்டும். இதனால் மூலப்பொருட்களின் வெப்பநிலை 60 – 62°செ. ஆக உயரும். வெப்பநிலை மேலும் உயருமானால், சுத்தமான காற்றை அறையினுள் செலுத்தி,  மூலப்பொருட்களின் வெப்பநிலை அதிகமாகாதவாறு சுமார் 2 மணி முதல் 4 மணி நேரம் பராமரிக்க வேண்டும். இதனால் தேவையற்ற களைப் பூசணங்களும், கிருமிகளும் கட்டுப்படுத்தப்படும். இம்முறையில் தொற்று நீக்கம் செய்தபின், காற்றுப் போக்கிகளின் கதவை இலேசாகத் திறந்து, அறையின் வெப்பத்தை 40-45°செ. அளவுக்குக் குறைக்க வேண்டும். இதனால், மூலப்பொருட்கள் நன்கு மக்கி மெதுவாகக் குளிர்ச்சி அடையும். ஓரிரு நாட்களில் மட்கின் வெப்பநிலை 50°செ.க்குக் குறைந்து அமோனியா நெடி இழந்து, பதமான நிலையை அடையும்.

மேலும் ஓரிரு நாட்களில் மட்கின் வெப்பநிலை 50°செ.க்குக் குறைந்து அமோனியா நெடி முழுமையாக நீங்கி, 65 முதல் 75 சத ஈரப்பத்ததுடன் காளான் விதையிடத் தயாராகி விடும். குறைந்த காலமுறையில் மட்கு தயாரிக்க 16 நாட்கள் மட்டுமே ஆவதோடு மட்கின் தரம் நன்றாக இருப்பதால் காளான் விளைச்சலும் அதிகமாகக் கிடைக்கும்.

Updated on Dec 2013

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014